Wednesday, November 12, 2008

சிறுநீரகம்

பெருமளவு நீரைச் சேமிக்கும் சிறுநீரகம்

ஒன்றுக்கு போதல் என்றால் தமிழில் சிறுநீர் கழிக்கப்போதல் என்று அர்த்தம். அது இடக்கரடக்கல் என்று எப்பவோ தமிழாசான் படிப்பித்த ஞாபகம். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை சிறுநீரகம் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கழிவுகளை அகற்றல், நீர்ச்சமநிலையை, உப்புகளின் சமநிலையை பேணல், எரித்திரோபொயிற்றீன் என்ற செங்குருதிசிறுதுணிக்கைகளின் உருவாக்கத்திற்கு தேவையான ஓமோன்களைச் சுரத்தல் என்று பல தொழில்களை ஒரேநேரத்தில் அது செய்கிறது .

சிறுநீரை உருவாக்குவது சிறுநீரகம். சிறுநீர் ஒரு கழிவுப்பொருள். அதில் யூரியா, மேலதிக உப்புகள், கிரியற்றினின், நீங்கள் உட்கொண்ட சில மருந்துகள் என்பன நீரில் கரைந்த நிலையில் காணப்படும். இந்த சிறுநீர் உருவாக்கம் சிறுநீரகத்தியில் உள்ள கலன்கோளத்தில் இரத்தம் வடிக்கப்படும் செயன்முறையுடன் ஆரம்பிக்கும். இப்படி வடிக்கபபட்ட கலன்கோள வடிதிரவத்திலிருந்து குளுக்கோசு போன்ற மூலக்கூறுகள் முற்றாக உறிஞ்சப்படும். முக்கியமாக நீர் மீள அகத்துறிஞ்சப்படும். இவ்வாறு அகத்துறிஞசப்படாதுவிட்டால் ஒவ்வொருநாளும் பரல்கணக்கில் நாம் சிறுநீர் கழிக்க வேண்டிஏற்படும்.

கிட்னி சட்னியாகிவிட்டது என்ற வசனத்தை சினிமாவில் நீங்கள் கேட்டிருக்கலாம். உண்மையில் சிறுநீரகம் திடீரென தொழிற்பட மறுக்கும்போது சிறுநீர் உற்பத்தியாவது திடீரெனத் தடைப்படும். இதனை acute renal failure என்று சொல்வார்கள். இதேபோல சிறுநீரகம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழுதடைந்து செல்லுதல் chronic renal failure எனப்படும். அவ்வாறு சிறுநீரகம் பழுதடைய நீரிழிவு (Diabetes) உயர்குருதியமுக்கம் (Hypertension) போன்ற நோய்கள் காரணமாக அமைகின்றன. சிறுநீரகம் குறித்த நிலைக்குமேல் தொழிற்பட முடியாமல் போனால் சிறுநீரகத்தை மாற்றீடு (Renal replacement therapy) செய்ய வேண்டும். இது குருதிச் சுத்திகரிப்பாக (Dialysis) அல்லது சிறுநீரக மாற்று சிகிற்கையாக (Renal transplant) அமையலாம்.

சிறுநீரகம் என்றவுடன் பலருக்கு ஞாபகம் வருவது சிறுநீரக கல்தான். சிறுநீரில் வெளியேற்றப்படும் ஒட்சலேற்று பொசுபேற்று போன்ற உப்புக்கள் சேர்ந்து உருவாவது தான் இந்த கல். இது மண்போன்று சிறிய அளவில் இருக்கும்போது ஒரு பிரச்சனையுமில்லாமல் சிறுநீருடன் வெளியேறிவிடக் கூடும். பெரிய கற்கள் சிறுநீர்க் குழாய்களில் தடையை ஏற்படுத்துவதுடன் தாங்க முடியாத வேதனையையும் தரக்கூடும். நோவைப் பொறுத்தவரை மகப்பேற்று வேதனைக்கு அடுத்தபடியான கடுமையான வேதனை சிறுநீரக கல் தரும் வேதனை தான். தண்ணீர் குடிக்காமல் நீண்டநேரம் இருப்பவர்களுக்கு இவ்வகையான கற்கள் உருவாகலாம் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். தண்ணீர் பருகாமல் இருக்கும்போது நீரை இயன்ற மட்டும் சேமிப்பதற்காக சிறுநீர் செறிவாக்கப்படும். இதனால் கற்கள் உருவாகும் சாத்தியம் அதிகம். இது பழைய விடயம். புதிய விடயம் உன்ன தெரியுமா? மிகமிக அதிகமாக (ஏறத்தாழ 6-10 லீற்றர் நீரை ஒருநாளில்) பருகுபவர்களுக்கும் கல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாம். சிறுநீரகத்தில் உப்புக்கள் சேர்ந்து கல் உருவாகாமல் தடுக்க ஒருவகை புரத மூலக்கூறுகள் சுரக்கப்படுகின்றன. அதிகமான சிறுநீர் உருவாகும்போது இவை ஐதாக்கப்பட்டு விடுவதால் கல் தோன்றும் வாய்ப்பு அதிகமாம். எங்களுக்கென்ன, நாங்கள் எல்லாவற்றையுமே அளவோடு செய்பவர்கள் என்கிறீர்களா? என்றாலும் சிறுநீரக விடயத்தில் ஒரு கண் வைத்திருங்கள்.