Wednesday, November 5, 2008

உடல் சூட்டைத் தடுக்கும் நல்லெண்ணெய்

நல்லெண்ணெய். இதன் பெயரிலேயே அதன் சிறப்பு உள்ளது.

நல்லெண்ணை அல்லது எள் எண்ணெய் என்று நாம் இதனைக் கூறுகிறோம். எள் என்பது பல்வேறுபட்ட மருத்துவ குணங்களைக் கொண்டது.

எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயே நல்லெண்ணெய். பொதுவாக கிராமங்க்ளில் ஒரு பழமொழி கூறுவார்கள்.

``வைத்தியருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வாணிபருக்குக் கொடுக்கலாம்''- என்பதே அது.

அதாவது வைத்தியர் - டாக்டரிடம் செல்லாமல் இருப்பதற்கு, எண்ணெய் விற்கும் வாணிபருக்கு பணம் கொடுக்கலாம். எனவே அதிக எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தினால், வைத்தியச் செலவு இருக்காது என்பதே நம் முன்னோர் நமக்குக் கற்றுத் தந்த பாடம்.

உடல் சூட்டைத் தணிப்பதில் நல்லெண்ணெய் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

உடல் சூட்டால் வயிறு எரிச்சல், மலச் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒருவித பாரத்துடனான தலைவலி போன்ற எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க நன்றாகத் தேய்த்து, இளஞ்சூட்டில் வெந்நீர் வைத்து, நல்ல சீயக்காயைத் தேய்த்துக் குளிப்பதே.

`சனி நீராடு' என்பதன் பொருளும் அஃதே. நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு, உடலில் இருக்கும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர மேனிக்கு புதுப்பொலிவையும் நல்லெண்ணெய் அளிக்கிறது.

இதன் காரணமாகவே பெண்கள் பூப்பெய்தவுடன் நல்லெண்ணெயுடன் உளுந்தில் செய்யப்பட்ட கழியையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள். உளுந்தும் உடலுக்கு குளிர்ச்சி என்பதால், உடலின் சூட்டைத் தடுக்கவே இவற்றைத் தருகிறார்கள்.

No comments: